
சென்னை,இஸ்லாமிய மக்களின் கண்ணியத்தையும், பெருமையையும் காப்பதில் தி.மு.க. என்றென்றும் முன்னணியில் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
விளக்கம் - கொளத்தூர் தொகுதி மக்கள் குறைகளைக் கேட்டறிவதற்காக நான் நடத்தி வரும் “பேசலாம் வாங்க!“ தொடர் சந்திப்பு – நிகழ்ச்சிகளின் பத்தாவது நிகழ்ச்சி 27.6.2015 அன்று முடிந்ததும் என்னைப் பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விகளுள் ஒன்று, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, “முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்“ என்று பேசியது பற்றியதாகும்...
அதற்கு நான், எச்.ராஜா என்ன சொன்னார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத நிலையிலும், ஊடக விளம்பரத்தை ஈர்ப்பதற்காக அவர் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தெரிவித்துப் பழக்கப்பட்டவர் என்பதாலும், “சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பதில் சொல்லத்தயாரில்லை“, என்று பதில் அளித்தேன்.
ராஜா, ‘பர்தா‘ பற்றி சொன்னது சர்ச்சைக்குரிய கருத்து என்று ஒரு சிலர், என்னுடைய பதிலை வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்து பொருள் கொண்டு, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திட சமூக வலைதளத்தில் வலிந்து முயற்சி மேற்கொண்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
‘சர்ச்சை‘ என்ற சொல்லை நான் பயன்படுத்தியது, ராஜா பின்பற்றி வரும் பிற்போக்கு அணுகுமுறையைப் பற்றியதே அல்லாமல், பர்தா பற்றிய கருத்து சர்ச்சைக்குரியது என்ற பொருளில் நிச்சயமாக இல்லை என்பதையும், ஏற்கனவே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்றுவிட்ட ஒன்றை விவாதப்பொருளாக்கிடக் கூடாது என்ற எனது எண்ணத்தையும், மீண்டும் ஒருமுறை யாருக்கும் எவ்வித அய்யப்பாட்டுக்கும் இடமில்லாதவாறு, தெளிவுபடுத்திடப்பெரிதும் விரும்புகிறேன்.
முற்றுப்புள்ளி - ராஜாவின் கருத்து குறித்து, நான் நேற்று எனது முகநூலில், “மதச்சார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல; அவர்களின் உரிமையும் ஆகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற வெறுப்பூட்டும் பேச்சுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என்று உறுதிபடத்தெரிவித்திருப்பதுதான்.
தி.மு.க. தொன்றுதொட்டு உளப்பூர்வமாக மேற்கொண்டு வரும் உண்மையான நிலைப்பாட்டினை ஒட்டிய எனது அணுகுமுறையும் தெளிவுரையும் ஆகும்.
இந்த என்னுடைய நேரடியானதும் நேர்மையானதுமான விளக்கத்திற்குப் பிறகும், இட்டுக்கட்டிய தவறான தகவலை திரைமறைவில் பரப்பிட யாரும் முயற்சித்தால், அதனை பொதுமக்கள் அடையாளம் கண்டு, அதன் பின்னணி நோக்கம் என்ன என்பதையும் நிச்சயமாக புரிந்து கொண்டு நிராகரித்து விடுவார்கள் என்பதால்; இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னணி - சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பேணிக்காப்பதிலும், அவர்களின் நலனுக்கென அயராது பாடுபடுவதிலும், தி.மு.க. என்றென்றும் முன்னணியில் இருந்து வருகிறது என்பதை, அதன் கடந்த காலச்சாதனை ஆவணங்களை கருத்தில் கொண்டு, தமிழக மக்கள் நன்கறிவர் என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
thanks - dailythanthi.com
Post a Comment